கொரோனா சிகிச்சைக்கு 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை

ஜெனீவா: உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு சுமார் 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை நிலவுகிறது என உலக சுகாதார அமைப்பின் கூட்டாளர்களான நர்சிங் நவ் மற்றும் சர்வதேச நர்ஸ்கள் கவுன்சில் (ஐ.சி.என்) ஆகியவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்தவொரு சுகாதார அமைப்பிற்கும் நர்ஸ்கள் முதுகெலும்பாக உள்ளனர். இன்று, பல நர்ஸ்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை முன்னிலைப்படுத்தி பணியாற்றுகின்றனர். உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்களுக்கு தேவையான ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியமானது. உலகில் 2.8 கோடிக்கும் குறைவான நர்ஸ்கள் மட்டுமே உள்ளனர். ஆனாலும் இன்னும் உலகளவில் சுமார் 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறையுடன் தான் இருக்கிறது. அனைத்து நாடுகளும் தங்கள் நர்சிங் பணியாளர்களில் உள்ள பற்றாக்குறையை கண்டறிந்து நர்சிங் கல்வி, வேலைகள் மற்றும் தலைமை ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் எனக்கூறினார்.


ஐ.சி.என்., தலைமை நிர்வாகி ஹோவர்ட் காட்டன் ஒரு மெய்நிகர் மாநாட்டில் கூறுகையில், தொற்று விகிதங்கள், மருத்துவ பிழைகள் மற்றும் இறப்பு விகிதங்கள் ஆகியவை மிக குறைவான நர்ஸ்கள் இருக்கும் இடங்களில் அதிகமாக இருக்கிறது. பற்றாக்குறை, தற்போதைய நர்சிங் பணியாளர்களையும் வெளியேற்றும். வேலைக்குச் செல்லாத சுகாதாரப் பணியாளர்கள் மிக அதிகமானவர்கள் உள்ளனர், ஏனெனில் அவர்கள் பாதிக்கப்படுவோம் என பயப்படுகிறார்கள். மேலும், அவர்களுக்கு பாதிப்பு இல்லை என நிரூபிக்கவும் முடியவில்லை. இத்தாலியில் 23 நர்ஸ்களும், உலகம் முழுவதும் சுமார் 100 சுகாதார ஊழியர்கள் இறந்துவிட்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.