மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: 'மக்கள் மனசாட்சியோடு, போலீசாரை எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால் அனைவருக்கும் நல்லது' என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.

நோய் என்பது இயற்கையாக வருவது. யாரிடமும் சொல்லிவிட்டு நோய் வருவதில்லை. யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால் நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஏனெனில் ஒவ்வொருவருடைய உயிரும் அரசிற்கு மிக முக்கியம்.


அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்கள் நலன் கருதி தான் என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நோயினுடைய தன்மையை, தாக்கத்தை உணர்ந்து, தடை உத்தரவை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

சோதனையான இந்த நேரத்தில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.